Tuesday 19 September 2023

தந்தி எனும் TELEGRAM (15-07-2013 நிறுத்தப்பட்டது)

 தந்தி

    இன்றைய தலைமுறையை சேர்ந்த பலருக்கும் இந்த வார்த்தையின் உண்மை அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  சென்ற தலைமுறை வரை தகவல் பரிமாற பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்கள் கடிதம் எழுதுவது மட்டுமே.  அவ்வாறு எழுதப்படும் கடிதங்கள் ஊர்களில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டிகளில் போடப்பட்டு அவை தபால் நிலையங்கள் வழியாக குறிப்பிட்ட விலாசத்திற்கு தபால்காரர் ஒருவரால் கொண்டு சேர்க்கப்படும்.  இவ்வாறு பெறப்பட்ட கடிதங்கள் மூலம் தகவல்களை அறிந்து கொண்டு அதற்கான பதில்களை அனுப்பி வைக்கப்படும்.  இவ்வாறு ஒரு தகவல் அனுப்பி பின் அதற்கான பதில்களை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.



        சில நேரங்களில் அவசர தகவல்களை பகிரும் போது அந்த தகவல்கள் குறிப்பிட்ட நேர அளவுகளில் சென்று சேராததால், அவ்வாறு பகிரப்பட்ட தகவல்களால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும்.  உதாரணத்திற்கு, கல்லூரிக் கட்டணம் செலுத்த கடைசி தேதி அல்லது வேலைக்கான நேர்முக தேர்வு தேதியை அறிவித்தல் அல்லது ஏதேனும் துக்க செய்தி சொல்லப்பட்டால் அவை குறிப்பிட்ட நாளில் சென்று சேராமல் போவதால், தகவல் பரிமாறாப்பட்டும்  அதனால் பயன் ஏதும் இல்லாமல் போய்விடுகிறது.

        இந்த குறையை நீக்க, அதாவது ஒரு செய்தியை உடனுக்குடன் கொண்டு சேர்க்க உருவாக்காப்பட்டது தான் தந்தி அனுப்பும் முறை.  உண்மையில் இந்த முறையின் தேவை ஏற்பட்டதே போர்க்காலங்களில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்கே இவை முதலில் துவங்கப்பட்டன.  பின்னர் இவை பொது சேவைக்கு பயன்பட துவங்கியது.  பொது சேவையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்திய போது ஒரு சிக்கல் இருந்தது.

        கடிதம் எழுத பழகிய நாம், ஒரு தகவலை  விலாவாரியாக எழுதினோம். ஆனால் தந்தியில் அப்படி எழுத முடியாது.  ஏனெனில் தந்தி அனுப்ப வேண்டுமாயின், அதில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லது வார்த்தைக்கும் நாம் பணம் செலுத்த வேண்டும்.  அப்போது ஒரு தந்தியை அனுப்பினால் அதிக செலவு பிடிக்கும்.

        எனவே தந்தி அனுப்புபவர் செய்தியை இரத்தின சுருக்கமாகவும் அதே நேரத்தில் சொல்ல வந்த தகவலை தெளிவாகவும் அனுப்ப வேண்டியது அவசியம்.  அந்த காலத்தில் பள்ளி/கல்லூரியில் படித்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு வகுப்புகளில் கடிதம் எழுதுவதை பழக்குவது போல தந்தி அனுப்பும் போது பயன்படுத்த வேண்டிய நுட்பத்தையும் கற்று தந்தார்கள்.

    ஒரு உதாரணத்தை பார்ப்போம்:  ஒருவரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதை அவர் தம் மற்றொரு உறவினருக்கு தெரிவிக்க வேண்டுமாயின்... "உங்கள் தாய் நேற்று மாலையிலிருந்து உடல்நலம் சீர்குலைந்து விட்டார்.  எனவே அவரை இன்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். ஆகையினால் நீங்கள் அடுத்த பேருந்தை/ரயிலை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தால் நல்லதாக இருக்கும்" என்று தந்தி அனுப்புவதை விட "தாய் மருத்துவமனையில் அனுமதி. உடனடியாக கிளம்பி வரவும்" என்று சொல்லப்பட்டால் தகவல் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்ல வேண்டியவருக்கு புரியும்படியும் போய் சேர்ந்துவிடும். அதாவது MOTHER SERIOUS. START IMMEDIATELY என்ற நான்கு வார்த்தைகளில் அனைத்து தகவலும் பரிமாறப்பட்டுவிடும்.

        இங்கு எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.  வடிவேலு பார்த்திபன் இணைந்து "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்று எழுதப்பட்ட பலகையில் ஒவ்வொரு வார்த்தையாக நீக்கி, கடைசியில் வெறும் பலகையாகிவிடும்.  அது போல நாம் அனுப்பும் தந்தியானது சரியான தகவலை கொண்டு செல்ல வேண்டியது மிக முக்கியம்.  இல்லையென்றால் தந்தி அனுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லாமலாகிவிடும்.  குழப்பமான தந்தியினால் ஏற்படும் குழப்பத்தை இந்த உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

    ஒரு போர்க்களத்தில் எதிரியை பிடித்துவிட்டார்கள்.  அந்த எதிரியை கொன்று விட வேண்டும். பிழைக்கவிடக்கூடாது என்பது தகவல்.  அந்த தகவலை தந்தி மூலம் தளபதிக்கு அனுப்பப்படுகிறது.  ஆனால் அந்த தளபதி வந்த தந்தியை படித்து அந்த எதிரியை விடுதலை செய்து விடுகிறார்.  அவர் அந்த தந்தியின் வாசகங்களை புரிந்து கொண்ட விதம் அவ்வாறாக இருந்தது.  ஆனால் அதன் விளைவு... எதிரி பிழைத்துவிடுகிறார்!

தந்தியின் வாசகம்: KILL HIM NOT LIVE

           இந்த வாசகத்தில் ஒரு கமா அல்லது புள்ளி இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் இது  அதாவது KILL HIM. NOT LIVE அவனை கொன்றுவிடு. பிழைக்கவிடாதே.  ஆனால் தந்தியை படித்தவரோ KILL HIM NOT, LIVE (கொன்றுவிடாதே, பிழைத்து போகட்டும்) என்று புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு இது.  எனவே தந்தி அனுப்புவதில் கவனம் மிகவும் அவசியம்.  இல்லையென்றால் அனுப்பப்பட்ட தகவல் ஏருக்கு மாறாக புரிந்து கொண்டு மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கிவிடும்.

    Crystal Clear மற்றும் Short & Sweet-ஆக சொல்லப்பட்ட ஒரு தந்தியை உதாரணமாக பார்க்கலாம்.  ஒரு எழுத்தாளர் புதியதாக வெளியிடப்பட்ட தனது புத்தகத்தின் விற்பனை எப்படி இருக்கின்றது என்று வெளியீட்டாளரை (publisher) கேட்க எண்ணி "?" என்று தந்தி அனுப்புகிறார்.  அதாவது விற்பனை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிய கேள்விக்குறியை மட்டும் அனுப்புகிறார்.  புத்தக வெளியீட்டாளர் மட்டும் என்ன சாதாரணமானவரா, அவரும் பதிலுக்கு "!"  ஆச்சரியக்கூறியீட்டை மட்டும் பதிலாக அந்த புத்தக ஆசிரியருக்கு அனுப்புகிறார்.  அதாவது ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் புத்தக விற்பனை உள்ளது என்பதனை தெரிவிக்கிறார்.  இந்த தந்தி உரையாடல்தான் உலகத்திலேயே மிகவும் சிறிய வார்த்தைகள்/எழுத்துக்களை கொண்ட தந்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதாவது மணிரத்னம் படத்தில் வரும் வசனங்களை போன்று நறுக்கு தெரித்தால் போல தந்தியில் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதனை நாம் இங்கு விளங்கிக் கொள்ள முடியும்.

        இது போக தந்தியானது அதிகமாக வாழ்த்து செய்திகள் சொல்லவும் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளவும் பயன்பட்டன.  இது போன்ற செய்திகள் அதிகமாக தந்தியில் அனுப்பப்பட்டதால் அந்த துறையில் ஒரு நடைமுறையை கொண்டுவந்தனர்.   அதாவது பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமா?  திருமண வாழ்த்தா?  கடை திறப்பு விழாவா?  அல்லது தேர்வில்/தேர்தலில் வெற்றி பெற்றவரை வாழ்த்த வேண்டுமா?  இல்லை மரண செய்தியா?  சுதந்திர தின அல்லது குடியரசு தின வாழ்த்தா? பண்டிகை கால வாழ்த்தா?  இப்படி பொதுவாக பகிரப்படும் வாழ்த்து செய்திகளை சில எண்களை கொண்டு தீர்மானித்து வைத்தனர்.

தந்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட நிலையான வாக்கியங்களும்
அதனை குறிக்க பயன்படுத்திய இலக்கங்களும்
(நன்றி google image)

        உதாரணத்திற்கு, திருமண நாள் வாழ்த்து சொல்ல 30 (THIRTY) என்ற எண்ணை எழுதினால் போதும்.  அனுப்ப வேண்டிய நபருக்கு BEST WISHES ON YOUR WEDDING ANNIVERSARY என்று தந்தி போய் சேர்ந்துவிடும். இந்த இடத்தில் THIRTY என்பதற்கு பதிலாக THIRTEEN என்று சொல்லி விட்டால் அல்லது தவறாக எழுதிவிட்டால் "திருமண நாள் வாழ்த்து"-க்கு பதிலாக "உங்கள் வாழ்த்துக்கு நன்றி" என்று சென்றுவிடும்.  எனவே எண்களை தேர்வு செய்யும் போது நாம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

            இதே போன்று ஒருத்தருக்கு அதிக அளவில் தந்திகள் வருவதாக இருந்தால் அவருடைய விலாசத்தை எழுதுவதில் அதிக வார்த்தைகள் அல்லது எழுத்துக்கள் உபயோகமாவதாலும் தந்தி அனுப்பும் கட்டணம் அதிகமாகிவிடும்.  எனவே அப்படிபட்ட நிருவனங்கள் தங்களுக்கென்று ஒரு வார்த்தையை தபால் நிலையத்தில் தகுந்து கட்டணம் செலுத்தி பதிந்து வைத்து கொள்ளும் நடைமுறையும் இருந்தது. 


                மேலே உள்ள VISITING CARD-களில் (நன்றி கூகுள் இமேஜ் & LINKEDIN) Cable: KILIGRAHPY என்று உள்ளதுதான் KILBURN REPROGRAHICS LIMITED, BOMBAY என்ற நிருவனத்தின் தந்தி விலாசம்.  யாரேனும் இந்த நிறுவனத்திற்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றால் முழு பெயரையும் விலாசத்தையும் எழுத தேவையில்லை.  KILIGRAPHY என்று மட்டும் எழுதி என்ன தகவலை சொல்ல வேண்டுமோ அதை சொல்லிவிட்டால் இந்த நிறுவனத்திற்கு அந்த தகவல் பகிரப்பட்டுவிடும்.
தந்தி எழுத்துக்களின் தட்டச்சு வடிவம்

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி
கடிதம், தந்தி, தொலைபேசி, ஈமெயில் மற்றும் சமூக ஊடகம்

TELEX Machine

            தந்தி என்பது ஒரு வழி தகவல் பறிமாற்ற வசதியாகும்.  இதன் அடுத்த கட்ட முன்னேற்றமாக TELEX என்ற தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தது.  TELEGRAM மற்றும் TELEX இந்த இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்றால், TELEGRAM எனும் தந்தி அனுப்பும் இயந்திரம் தபால் நிலையத்தில் இருக்கும்.  நாம் அங்கு சென்று TELEGRAM அனுப்ப வேண்டும்.  TELEX இயந்திரம் நாம் பயன்படுத்தும் தொலைபேசியின் வாயிலாக (LAND LINE-தான் அப்போதெல்லாம்) பெரிய பெரிய நிருவனங்கள் வாங்கி வைத்துக்கொண்டு பயன்படுத்த தொடங்கின.  இதிலும் வெறும் TEXT மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது.  தொலைபேசியில் பேசினால் அப்போதெல்லாம் record செய்யும் வசதி இல்லாததால் இந்த TELEPHONE + TEXT = TELEX என்பது எழுத்துபூர்வ record ஆவணமாக பயன்படுத்தப்பட்டது

            TELEX-ன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக வந்ததுதான் TELEFAX எனப்படும் FAX அனுப்பும் நடைமுறை.  கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தின் BUSINESS CARD என்றால் அதில் நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், தந்தி விலாசம் மற்றும் TELEX/TELEFAX போன்ற அனைத்து தகவல்களுடன் குறிப்பிட்ட நபரின் பெயரோடு அவர் அந்த நிறுவனத்தில் வகிக்கும் பொறுப்பு என அனைத்தும் பகிரப்பட்டு இருக்கும்.  மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என்றால் தற்போது SOCIAL MEDIA LINK அல்லது ID கொடுப்பது போல அன்றைக்கு இந்த VISITING CARD கெத்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது ஒரு கூடுதல் தகவல்.

எங்களது பள்ளி இறுதி தேர்வு முடிவு இந்த அஞ்சல் அட்டையில் (Post Card) 
தான் வீட்டுக்கு அனுப்புவார்கள்.  PROMOTION என்று வந்திருந்தால் தபால்காரருக்கும் மிட்டாய் தர வேண்டும்.  தேர்ச்சி அடையமாட்டோம் என்று தெரிந்தால் அதே Post Man-ஐ Post Office-லேயே சென்று கரெக்ட் செஞ்சு அந்த தபால் அட்டையை வீட்டிற்கு கொண்டு வராமல் இருக்க அவரை கவனித்து
பெற்றுக் கொண்டதெல்லாம் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...