Monday 24 June 2013

பொறுப்பு யார் ஏற்பது?

பாவம் தொலைக்க சென்றவர்கள் சோகத்தில் மூழ்கிய அவலம்.

பாடம் கற்க தயாரா?

புனிதப்பயணங்கள் இன்று இன்பச்சுற்றுலாவாக மாறியதால் ஏற்பட்ட பாதிப்பா?
அல்லது
பாதுகாப்பற்ற பயணமுறையா?
அல்லது
பணம் சம்பாதிப்பதே ஒரே குறிக்கோளாக கொண்ட சுற்றுலா நிறுவனங்களா?
அல்லது
வரி கிடைத்தால் போதும், எதற்கும் அனுமதி கொடுக்கத்தயாராக இருக்கும் அரசாங்கங்களா?
அல்லது
இன்றைய சவுகரியங்களே நமக்கு முக்கியம், அடுத்த தலைமுறையினரை பற்றி நாம் ஏன் கவலைபடவேண்டும் எனும் மனநிலையா?
அல்லது 
பழைய நிகழ்வுகளிலிருந்து நாம் பாடம் கல்லாததா?

காரணம் எதுவாக இருப்பினும் நாம் கற்க வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது.
























நேற்று தமிழகம் திரும்பிய பயணிகள் நிருபர்களிடம் பேசுகையில்; திடீரென மழை பெய்து எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடியதை பார்க்க முடிந்தது. எங்கு செல்வது என்றே தெரியவில்லை. நாலாபுறமும் சிதறி ஓடினோம். எங்கள் கண் முன்னே உறவினர் தண்ணீரில் இழுத்து செல்வதை பார்த்தோம். 5 நாட்கள் பெரும் அவதிப்பட்டோம். மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை. சிலர் பட்டினியால் இறந்து போயினர். நாங்கள் இரவு , பகல் முழுவதும் கடும் குளிரில் பெரும் துயரப்பட்டோம். எங்களை சுற்றி பிணங்கள் கிடந்தன. பிணங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம் என்றனர் கண்ணீருடன் .
-நன்றி தினமலர்.
படங்கள் msn.com


Sunday 23 June 2013

மை ஃபர்ஸ்ட் வைஃப் - by my பொண்டாட்டி - இறுதிப் பகுதி

முதல் பகுதியை படிக்க தவறியவர்கள் இங்கு பார்க்கவும்

உள்மனதின் குறலை புரிந்துக்கொண்டு எச்சரிக்கையாக பேச ஆரம்பித்தேன்.  "நேற்று ஃபோன் பண்ணவங்க பற்றி தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்.  அவங்களை பற்றி சொல்ல முடியுமா?" என்று தான் கேட்டேன்.  அட அட... எங்கிருந்துதான் அந்த மகிழ்ச்சி வந்ததோ அவருக்கு தெரியவில்லை.  வேலைக்குச் செல்ல தாமதம் ஆவதைக்கூட நினைக்காமல் மடை திறந்த வெள்ளம் போல, கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் மூச்சு முட்ட பேசிக்கொண்டே இருந்தார்.  அதையெல்லாம் நான் உங்ககிட்டே சொன்னேன் என்றால்... இல்ல வேணாம்ங்க! என் கஷ்டம் என்னோடவே போகட்டும்.  ஆனாலும் சுருக்கமாக அவர் கூறியதை சொல்கிறேன், எப்படி "சுரு"க்குனு இருக்கு பாருங்க!

இவங்க ரெண்டு பேரும் பழக ஆரம்பித்தது கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதுதானாம்!  கடந்த பல ஆண்டுகளாக மிகவும் அன்யோன்யமாக பழகிக்கொண்டிருகின்றனராம்.  கிள்ளிக்கொள்வது, கடித்துக்கொள்வது முதல் அடித்துக்கொள்வது வரை எல்லாம் நடந்துள்ளதாம்.  பல நாட்கள் ஒன்றாக தூங்கியுமுள்ளனராம்.  எல்லாவற்றையும் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல், அதுவும் என்னிடமே கூறுகின்றார்.   அவங்க பழக்கம் ஏற்பட்டது முதல் இவருக்கு கவித கொட்ட ஆரம்பிச்சுடுச்சாம்.  இவருக்கு சாண்டில்யன், ஜெயகாந்தன், பாலகுமாரன், Dr. MS உதயமூர்த்தியை எல்லாம் அறிமுகப்படுத்தியது அவங்கதானாம்.  அதுபோக அவங்களை பற்றி முதலிரவு அன்றைக்கே என்னிடம் கூறவேண்டும் என்று நினைத்தாராம்.  அவங்கதான் கொஞ்ச நாட்களுக்கு பின்னர் தெரிவிச்சுக்கலாம் என்று சொன்னதால், இதை பற்றி ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லையாம்!!  நல்ல வேளை, நானாகவே கேட்டுக்கொண்டதால், மனதில் இருந்ததை எல்லாம் அப்படியே சொல்லிவிட்டாராம்.

சரி, இனி விட்டுப்பிடித்தால்தான் முடியும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

காலங்கள் உருண்டோடுகின்றன.  வாழ்க்கை என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும்.  அதுபோல எங்களிருவருக்குள் கருத்து வேற்றுமை ஏற்படும்போதும் அவர் ஆறுதலுக்கு செல்வது அவங்களிடம்தான்.  சரி, அவர்தான் போய்த்தொலைகிறார் என்றால், அவங்ககிட்டேயே சொல்லி எனக்கு ஃபோன் பேசி என்னை சமாதானப் படுத்துவதும் அவங்கதான்.  "என்ன கொடும சார்" இது.  எந்த பொண்ணுக்கும் இப்படி நடக்கக்கூடாதுங்க!

சரி, எல்லாம் ஒரு நாள் மாறிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தால், ஒரு நாள் இவர் வந்து தான் செய்துகொண்டிருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்தப்போவதாக சொன்னார்.  மகிழ்ச்சியான விஷயம்தானே என்று பார்த்தால், அதில் அவங்களையும் ஒரு பங்குதாரராக்கிவிட்டார்.  வாழ்க்கையில்தான் பங்கெடுத்துக்கிட்டாங்க என்றால் வருமானத்திலுமா?  என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை.  ஆனால் என்ன செய்வது என்றறியாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தேன்.  கடவுளின் மீது பாரத்தை போட்டு காத்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்த இனியச் செய்தியை என் கணவரே தன் வாயால் வந்து சொன்னார்.  அவங்களுக்கு, அதாங்க அந்த மானுக்குங்க, திருமணம் நிச்சயிக்கப்படப்போகிறதாம்.  இதைவிட நல்ல செய்தி என்னவாக இருக்கும் எனக்கு சொல்லுங்க!  நிச்சயம் முடிந்து திருமணமும் நடந்தது.  நானும் குடும்பத்தோடு சென்று ஆசீர்வத்தித்துவிட்டு வந்தேன்.  அவங்களோட அவுங்க பேரு, கீதா ராணிங்க!



ஆன்ன்... சொல்ல விட்டுவிட்டேனே... மான் மான் என்று சொல்லிக் கொண்டிருந்தேனே அவங்க முழு பேரு அதியமானுங்க!  எல்லோரும் அவங்களை "மான்" என்றுதான் கூப்பிடுவாங்கங்கோ...கோ...  இப்போ அவங்களுக்கு அரவிந்தன் என்று ஒரு மகனும்  ஆரத்தி எனறு ஒரு மகளும் இருக்காங்க!  வாழ்க்கை சந்தோஷமாக இருக்குங்க!  ஆனாலும் இப்பவும் பேச ஆரம்பித்தார்களென்றால் இவங்க ரெண்டுபேருக்கும் நேரம் போறதே தெரிவதில்லை.... ஏன்  சாப்பாடுகூட தேவையில்லைங்க!



ஞாயமாறே... என்னுடைய எரிச்சல் என்னவென்றால், எங்கூடவும்தான் ரதி, மதி, விதி, சதி என்று எத்தனையோ பேரு படிச்சாங்க.  அவங்ககிட்டே இருந்து ஃபோன் வந்தாலோ அல்லது நான் அவங்களுக்கு ஃபோன் பேசினாலோ அளந்து பேச சொல்றாருங்க!  ஃபோன் பில்லு எகிறிவிடுமாம்!  இப்ப சொல்லுங்க என் எரிச்சல் ஞாயமானதுதானேங்க?

தீர்ப்ப சொல்லுங்க ஞ்...ஞ்...ஞா....ய்ய...ம்ம்....மா....ற்றே....

Tuesday 18 June 2013

ஓவர் டைம்

அலுவலகத்திலிருந்து சரியான நேரத்தில் கிளம்புங்கள், எப்பொழுதும்!


வேலை என்பது என்றுமே முடிவுறாத ஒரு விஷயமாகும்.
உங்களுக்கு வாடிக்கையாளர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானவர்கள் உங்களின் குடும்பமும் நட்பும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் வாழ்க்கையில் தடுமாறினால் உங்கள் முதலாளியோ வாடிக்கையாளரோ உதவ வரமாட்டார்கள்.  மாறாக, அப்போது ஓடோடி வந்து உதவுபவர்கள் நமது குடுபத்தினரும் நண்பர்களுமே.


வாழ்க்கை என்பது வேலை, அலுவலகம், முதலாளி, வாடிக்கையாளர் என்பது மட்டுமே அல்ல.  அதையும் தாண்டி.... 
வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடாதீர்கள்.

ஒருவர் அலுவலகத்தில் அதிக நேரம் உழைக்கின்றாரென்றால் அவர் கடின உழைப்பாளி என்றாகிவிடாது.  மாறாக, தன்னுடைய வேலையை குறிப்பிட்ட காலநேரத்திற்குள் முடிக்க முடியாத, நேரத்தை நிர்வகிக்கத் தெரியாத முட்டாளாகவே கருதப்படுவார்.


இவருக்கு தன் சொந்த வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் எந்தவித பொருப்பும் கிடைத்துவிடாது.  இவர் திறமையோ யோக்கியதையோ அற்றவராகவே கருதப்படுவர்.


நீங்கள் கடுமையாக படித்து முன்னேறியது ஒரு எந்திரத்தைப் போல வாழ்க்கைப்படவல்ல.
உங்களின் முதலாளி உங்களை அதிக நேரம் உழைக்கச் சொல்கிறாரென்றால் அவரும் திறமையற்றவரே!  அவரின் வாழ்க்கையும் அர்த்தமற்றதானதே எனபதை அவருக்கு புரிய வையுங்கள்.  அல்லது அவரையும் இதை படிக்கச் சொல்லுங்கள்.

கடைசியாக ஒரு விஷயம்:
சிறந்த உழைப்பாளிக்கு கிடைக்கும் பரிசு...
அதிக வேலை!!!

படங்களை சுட்டுக்கொள்ள உதவிய கூகுல் 'தல'க்கு நன்றி

Monday 17 June 2013

எப்படியெல்லாம் "தின்க்"றாங்க மை லார்ட்!

நானும் கடந்த 30 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன் இந்த சென்னையை develop செய்துக்கொண்டுதானிருக்கின்றனர்.  ஒவ்வொரு முறையும் ஒரு project ஆரம்பித்து அது முடியும்வரை ஒரே "ரப்சர்"தாங்க!  அந்த project முடியும் போது எந்த காரணத்துக்காக ஆரம்பித்தார்களோ அந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்காது அல்லது அதைவிட பிரச்சனை பல மடங்கு பெரியதாகியிருக்கும்.  உதாரணத்துக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் அல்லது ரயில்வே மேம்பாலம் அல்லது அடுக்குமாடி சாலைகள்.

சென்னையின் முதல் ரயில்வே மேம்பாலம் கோடம்பாக்கத்தில் கட்டப்பட்டது.  வருடம் 1963-65.  அப்போதே ஒவ்வொரு மருங்கிலும் இரண்டிரண்டு வாகனம் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டது.  அதேபோல சென்னை பீச் ஸ்டேஷன் அருகில் ரிசர்வ் பேங்க் எதிரில் அமைந்துள்ள under ground bridge.  இது 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  இதன் நீளம் 450 மீட்டராகவும் அகலம் 15 மீட்டராகவும் உள்ளது.  மற்றொரு பாலம் என்றால் அது சைதாப்பேட்டையில் இருக்கும் மறைமலை அடிகளார் பாலம்.  இப்பாலம் ஒரு காலத்தில் ஆசியாவின் மிக அகலமான ஆற்றுப் பாலம் எனும் பெருமையை கொண்டிருந்தது.  அதே போல  St ஜார்ஜ் கோட்டையையும் மெரினா கடற்கரையையும் இணைக்கும் நேப்பியர் பாலம். இவையனைத்தும் தங்களின் சேவையை இன்றுவரைக்கும் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.  இதற்கு மிகமுக்கிய காரணம் அன்று ஆரம்பிக்கும்போதே இவற்றின் குறிக்கோள் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால் இன்று செய்யப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கான காரணம் சேவை என்பது இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்களை கடத்த ஒரு திட்டமாகவே பார்க்கப்படுகிறது.  செயலாக்கத்திட்டம் என்பதே அடுத்து வரும் அரசுக்கு கொடச்சல் தரும் திட்டமாகவே ஆகிவிட்டது.  இதில் அதிகம் அவஸ்தைப்படுவது சென்னைவாழ் மக்கள்தான்.

இதோ சீனாவின் அடுத்த வளர்ச்சித் திட்டம்!

நான் ரசித்த ஒரு விளம்பரம் உங்களின் பார்வைக்காக.  நம் வளர்ச்சியை பாருங்க, விதவையின் நெற்றித்திலகம் அழியாமல் இருக்க ஒரு அரிய கண்டுபிடிப்பு!


தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்.





Saturday 15 June 2013

மை ஃபர்ஸ்ட் வைஃப் - by my பொண்டாட்டி! part 1

நான் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மையைத்தவிர வேறில்லை மை லார்ட் (அதாவது வாசித்து காரித்துப்பப்போகும் சமூகத்தாரே!)
இது என்னுடைய முதல் மனைவியைப் பற்றிய என் பொண்டாட்டியின் கருத்துக்கள். ஆனாலும் இந்த சக்களத்தி சண்டை என்றைக்குத்தான் தீருமோ  தெரியவில்லை.  இந்த பதிவை என் வார்த்தைகளில் படிப்பதைவிட என் மனைவியின் வார்த்தைகளில் வாசித்தால்தான் அதன் வீரியம் உங்களுக்கெல்லாம் விளங்கும் என்பதால், இதோ என் அன்பு பொண்டாட்டி பேசுகிறார்!

அப்போ எனக்கு திருமணமாகி பதினைந்து நாட்கள்கூட ஆகியிருக்காது.  இவர் வேலையிலிருந்து வீட்டுக்கே இன்னும் வரவில்லை. பொதுவாக இரவு எட்டு மணிக்கு கடையை மூடிவிட்டு ஒன்பதரைக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார் அவர்.  ஆனால் அண்றைக்கு எட்டரை மணியிலிருந்து வீட்டுக்கு ஃபோன் காலுக்கு பின்னால் ஃபோன் கால் பண்ணி, "அவர் வந்துவிட்டாரா வீட்டுக்கு" என்று பலமுறை அவங்க விசாரிச்சாங்க.  நான் கொஞ்சம் கொஞ்சமாக பொருமையை இழந்துக்கொண்டிருந்தேன்.  இவங்களுக்கு ஏன் இவ்வளவு படபடப்பு.  கட்டிக்கிட்டு வந்த நம்மகிட்டயே "வந்தா உடனேயே" அவங்களுக்கு போனில் பேசச் சொல்ல வேண்டுமாம்.  சரி உங்க பேர் என்னன்னு கேட்டா "மான் என்று சொல்லுங்க அவருக்கு தெரியும்" என்று வேறு சொல்றாங்க.



இவர் சரியாக ஒன்பதே காலுக்கு வீட்டுக்கு வந்தார்.  வந்ததும் வராததுமாக, "ஏதாவது ஃபோன் கால் வந்ததா?" என்று கேட்டதும் எனக்கு வந்தது பாருங்க கோபம்.  "வந்தது... வந்தது... ஏதோ தலையிருக்கிற பேனோ காட்டிலிருக்கிற மானோன்னு யாரோ ஃபோன் பண்ணாங்க! உடனே பேசணுமாம்" என்றேன்.  எனக்கு கல்யாணமான இந்த பதினைந்து நாட்களில் அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை நான் பார்க்கவில்லை.  அப்படியே பூரித்துவிட்டார்.  உடனே ஓடிபோய் ஃபோனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார்.  இவர் முகத்தில் நவரசங்களும் நாட்டியமாடின. "சே! அதுக்குள்ள ஃபோன் கட்டாயிடுச்சு" என்று வருத்தப்பட்டுக்கொண்டே வந்தவரிடம் "மணி பதினொண்ணு ஆகிடுச்சு, சாப்பிடலாமா?" என்றேன். அதற்கவர் அவங்களிடம் பேசியதே full meals சாப்பிட்ட மாதிரி இருக்குன்னு சொல்லிட்டார்.  அப்போதான் புரிந்தது, நாம் சைதாப்பேட்டைகாரனை நம்பி ஏமாந்துவிட்டோம் என்று!  சரி இதை இப்படியே விட்டால் சரிபட்டுவராது என்று அன்றைக்கே முடிவெடுத்தேன்.

அன்றிரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.  யாராக இருக்கும் அந்த மான்?  யாரிடம் கேட்பது?  எப்படி விசாரிப்பது?



விடிந்ததும் முதல் வேலையாக என் அம்மாவுக்கு ஃபோன் போட்டு நேற்று நடந்த விஷயத்தை தெரிவித்தேன்.  அதற்கு அவர் "உன் வீட்டுக்காரர் உன்னிடம் சந்தோஷமாக இருக்கிறாரல்லவா?  உன்னை சந்தோஷமாக வைத்திருக்கிறாரில்லையா? அதுபோதும்.  மற்றவையெல்லாம் சரியாகிப்போகும்.  கவலைப்படாதே" என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டார்.  இவங்க என்னை பெத்த தாயா இல்லை பேயா?  இப்படி சொல்றாங்க!  இவங்க இதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க.  நேராக மாமியாரிடம் போய் விஷயத்தை சொன்னேன். அதற்கவர் "இப்போதாவது ஒழுங்கா வீட்டுக்கு வரானே!  உன்னை கட்டிக்கிறதுக்கு முன்னாடியெல்லாம் பாதி நாட்கள் அவன் அவங்க வீட்டில்தான் தங்குறதே!  நீ ஒண்ணும் கவலைப்படாதே" என்றார்.  அடச்சே!  சரியான அசிங்கம் பிடித்த குடும்பத்தில் வந்து மாட்டிக்கிட்டோமே என்று அழுகையா வந்தது.  ஆனால் நான் அழவில்லை.  அழவும்மாட்டேன்!  இனி சாட்சிகாரங்க காலில் விழுந்து பிரயோஜனமில்லை.  நேரா சண்டைக்காரன் தான்!



அவர் வேலைக்கு போவதற்கு முன், "எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்" என்றேன்.  "என்னடா, சொல்லு DEAR" என்று ஒண்ணுமே நடக்காதது போல, அப்படியே தலையில் ஐஸ் வைத்தார்.  அவர் எப்போதும் இப்படித்தாங்க.  பேச ஆரம்பித்தார் என்றால், வயித்திலிருக்கும் குழந்தைகூட தானா வெளியே வந்த்துவிடும்.  "ஏய்... ஏமாந்துவிடாதே" என்று உள்மனது எச்சரித்தது!


Wednesday 12 June 2013

‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’

அப்போது எனக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயது!?
படிக்கும்போது நண்பர்கள் "மச்சீ, அவ உன்னையே பார்க்கிறாடா" என்று கோர்த்துவிட, நாமும் அதையே நம்பி "மாப்ளே நானும் ஹீரோதான்... ஹீரோதான்.... பார்த்துக்கோ..." அப்படீன்னு வடிவேலு ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுன காலகட்டத்தில், இன்று உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் இருந்தேன்! அதுவும் உன்னுடைய வீட்டில் நடக்கும் விழாவில்! உன்னிடம் முதல்முறையாக பேசிவிடுவது என்று பலவாறாக ஒத்திகையும் பார்த்து முடித்தாகிவிட்டது.

விழா சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது. நானும் உன்னை எப்படியாவது பார்த்துவிடுவது என்று பலவகையில் முயன்றுகொண்டிருந்தேன். நீயோ உன்னுடைய அறையிலிருந்து வெளியே வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எப்படியாவது உன்னை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால், அங்கு நான் கண்டது  6 அடி 8 அங்குல அஜானுபாகுவான உன்னுடைய உடன்பிறப்பு. வேறு வழியில்லை. வாலை சுருட்டிக்கொண்டேன். விழா இனிதே முடிந்தது. அனைவரும் தத்தம் வீடுகளுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். பேசவேண்டும் என்று போட்ட ஒத்திகைகள் கண் முன்னே வந்துகொண்டிருக்க, "அடச்சே! ஒரே ஒரு பார்வை கூட பார்க்க முடியவில்லையே" என்று நொந்தவனாக வீட்டை அடைந்தேன்.

வீட்டிற்கு வந்தால் என் அண்ணன் விழா மிகச்சிறப்பாக நடந்ததல்லவா என்று கூறி என்னுடைய எரிச்சலில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூறியதில் ஒரு வார்த்தை என்னுடைய மனத்தில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா?" என்று பல்பு எரியவிட்டது!  ஆம். அண்ணன் "வீடியோ காசெட் இன்னும் இரண்டு தினங்களில் எடிட் செய்யப்பட்டு நமக்கு கிடைத்துவிடும்" என்றார். ஆஹா அண்ணனின் வாக்கு அருள் வாக்காகப்பட்டது.

இரண்டு தினங்கள் என்பது மிகவும் மெதுவாகச் சென்றது. நானே அண்ணனிடம் பேசி வீடியோ எடுத்தவரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரை நச்சரித்து சீக்கிரம் கேசட் கொடுக்க வற்புருத்தி பெற்றுக்கொண்டேன். இப்போது வீட்டில் கேசட் போட்டு பார்க்கலாம் என்றால் அனைவரும் வந்து டிவி பெட்டிக்குமுன் அமர்ந்துவிட்டனர். நமக்கோ வெட்கம் கலந்த பயம். எங்கே நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமோ என்று. பயந்ததுபோலவே என் அக்கா கேட்டுவிட்டார் "என்னடா அந்த ரூமையே திருட்டு முழியோட பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று.  "வீடியோகிராஃபரை கொல்லவேண்டும். நாய் நம்மையே வளைத்து வளைத்து படம் எடுத்திருக்கான்" என்று மனதில் கருவிக்கொண்டே நீ எந்த ஷாட்டில் வருகிறாய் என்று காத்துக்கொண்டிருந்தேன்.

அதோ என் தேவதை! நீல நிறத்தில் பட்டுடுத்தி, அதில் வெள்ளியிலாலான சிறு பூக்களோடு! உன்னை எப்படி வர்ணிப்பது எதை வர்ணிப்பது?
உன்னுடைய கருங்கூந்தலையா அல்லது உன்னுடைய கருவிழிகளையா அல்லது ரோஜாப்பூ நிற கன்னங்களையா அல்லது அந்த ஆரஞ்சு அதரங்களையா அல்லது சங்குக் கழுத்தையா அல்லது உன்னுடைய இல்லாத இடையையா?

என் வானில் பூந்தோட்டம்
என் வாழ்வின் தேரோட்டம்
என் வாழ்க்கைக்குத்தந்தாய் உயிரோட்டம்

அன்றுமுதல் எனக்கு பிடித்த நிறம் நீலமானது.

அந்த 1 நிமிடம் 26 நொடி வீடியோ என்னை கிருக்கனாக்கியது. அந்த வீடியோ காசெட்டுக்கு வாயிருந்தால் அது என்னை திட்டித்தீர்த்திருக்கும்.  நேரம் கிடைத்தபோதெல்லாம், தனிமையில், திருப்பித் திருப்பி அந்த 89 நொடி (கிட்டத்தட்ட) வீடியோவை, படம் தேயும் வரை பார்த்தேன்.

இந்த இனிய எண்ணங்களை உன்னிடம் சொல்லவேண்டும்.  உன்னை என்னவளாக்கிக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு முறை கண்களை மூடி உன்னைப்பார்த்து பேசவேண்டியதை ஒத்திகை பார்த்தேன்.

"என்னங்க... என்னங்க... பஸ்ஸுலே உட்காந்தா எப்படிதான் தூக்கம் வருதோ உங்களுக்கு. எந்ந்ந்த்த்திரிங்ங்க்ங்க்க!  சைதாப்பேட்டை வந்திடுச்சு எந்திருங்க!" என்ற என் நீலக்குயிலின் குரலைக்கேட்டு கண்விழித்தேன். நான் அவரை நோக்க அவர் என்னை நோக்க... "என்ன மீண்டும் கனவா?" என்றார்.

அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அதுவொரு அழகிய நிலாக்காலம் என்று மனம் உள்ளுக்குள் பாடிக்கொண்டது!

கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று கண்சிமிட்டியபடியே என்னவள் பஸ்ஸிலிருந்து இறங்க நானும் அவரை பின்தொடர்ந்தேன்.

Wednesday 5 June 2013

நான் தந்தையானேன்

ஜூன் 5


அப்போது நாங்கள் மதுரையில் வாழ்ந்துக்கொண்டிருந்தோம்.  என் மனைவி பிரசவத்துக்காக சென்னைக்கு சென்றிருந்தார்.  காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்து எனக்கு மகன் பிறந்துள்ளான் எனும் இனிய செய்தி தெரிவிக்கப்பட்டது. சந்தோஷம் என்றால் அப்படி ஒரு பரம சந்தோஷம்.

உடனே சென்னைக்கு செல்லவேண்டும்... மகனை பார்க்க வேண்டும்.

வைகை எக்ஸ்பிரஸ் கிளம்பிவிட்டது. எனவே வேறு வழியில்லாமல் திருவள்ளுவர் பேருந்தில் (அப்போதைய விரைவுப்பேருந்தின் பெயர்) காலை எட்டு மணிக்கு ஏறியாகிவிட்டது.  பொதுவாக இரவில் பயணித்தால் நேரம் செல்வதே தெரியாது. 8 முதல் 9 மணி நேர பயணம்தான். அதுவும் வண்டியில் உட்கார்ந்தால், படம் பார்க்கவில்லையெனில், அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் தூங்கிவிடலாம். தாம்பரத்தை வண்டி நெருங்கியவுடன் எழுந்துக்கொள்ளலாம்.
அதுவே பகல் நேர பயணம் என்றால்... அதுவும் மகனை பார்க்க செல்வதென்றால்....
அதிகபட்சம் 12 மணி நேரம் என்றாலும் இரவு எட்டு மணிக்கு சென்னையை சென்றடைந்துவிடும். பையனை உடனே பார்த்துவிடலாம்.
ஆனால் அந்த பேருந்தோ அனைத்து சிறிய பெரிய ஊர்களுக்கும் உள்ளே சென்று வந்துகொண்டிருந்தது. திருச்சி சென்றடைந்த நேரமோ பகல் 1 மணி!  ஒவ்வொரு மணி நேரமும் ஒரு நாளைப்போல இருந்தது எனக்கு!

ஒருவழியாக இரவு சரியாக பத்தரை மணிக்கு சென்னையை வந்தடைந்தேன். அங்கிருந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்கு இரவு பதினொண்ணேகாலுக்கு சென்றடைந்தேன். மருத்துவமனை பூட்டப்பட்டிருந்தது. பூட்டிய கதவை தட்டினால் ஒரு காவலாளி வந்து விசாரித்தார். நான் பிள்ளையை பார்க்க வந்துள்ளேன் என்று ஆவலாக சென்னேன். அதற்கு அவர் நாளை காலை வந்து பார்த்துக்கொள்ளவும் என்று கூறிவிட்டார். எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அவர் முடியாது என்பதையே பதிலாக கூறிச்சென்றுவிட்டார்.

வீட்டிற்கு சென்றால் தூக்கம் வரவில்லை.  எப்போது விடியும் என்று விடிய விடிய விழித்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் காலை சரியாக ஆறு மணிக்கு மருத்துவமனையில் ஆஜர்.  கதவு திறக்கப்பட்டது. ஓடோடி மனைவியிருக்கும் அறையை கேட்டுச் சென்றேன்.
அதோ என் மகன்.  அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.
அவனை அப்படியே தூக்கி நெற்றியில் முத்தமிட்டேன். மனைவியை பார்க்கிறேன்... கண்களிலிருந்து நீர்! என்ன என்று கேட்டால்... "ஒன்றுமில்லை" என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

இவை நடந்து இருபத்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இன்று அவர் ஒரு மருத்துவர்.
Dr. இம்ரான்!

மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தெ டே மை ஸன்!
யூ மேட் மீ ப்ரவ்ட்!!




Tuesday 4 June 2013

திருமணம்

ஏதோ கனவு போன்றே இருக்கிறது.
இதோ இருபத்து நான்கு ஆண்டுகள் முடிந்து வெள்ளிவிழா ஆண்டில் காலெடுத்து வைத்தாகிவிட்டது!


இந்த ஆண்டுகளில் நாங்கள் சண்டைப்போட்டுள்ளோம்!
விவாதித்துள்ளோம்! அழுதுள்ளோம்! நாங்கள் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேருபாடுகளும் ஏற்பட்டுள்ளன.
இவையனைத்தும் பொதுவானவை. இவை அனைவரின் வாழ்விலும் நடந்து கடந்து சென்றிருக்கும்.  ஏனெனில் உறவு என்பதில் மகிழ்ச்சி, சோகம், சண்டை, சமாதானம், விவாதம் மற்றும் ஒப்பந்தம் நடந்து கொண்டே இருக்கிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் மனஸ்தாபத்தை எங்களின் இதயத்துக்கு கொண்டுசெல்வதில்லை அதேபோல சண்டை சச்சரவுகளை எங்களின் படுக்கையறைக்கும் கொண்டுசெல்வதில்லை என்பதில் முதல் நாளிலிருந்தே கவனமாக முடிவெடுத்திருந்தோம்.
இந்த முடிவுதான் எங்களின் உறவை சிறப்பாகவும் அசாதாரணமாகவும் மாற்றியது.
எங்கள் உறவின் சாராம்சம் என்பது அன்பு மட்டுமே!
மேலும் இந்த அன்புமட்டுமே எங்களை இணைத்துள்ளது, இன்றுவரை.
வரும் காலங்களிலும் இதுவே எங்களை வழிநடத்தும்.
எங்களின் உறவு என்பது உண்மையானதும் நேர்மையானதும் ஆழமானதும் களங்கமற்றதும் என்று உணர்ந்தேயிருக்கிறோம்!
நாங்கள் இருவரும் ஆழமாகவும் வெறித்தனமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் நேசிக்கின்றோம்... நேசிப்போம்.
என்றேன்றும் நாங்கள் சிறந்த ஜோடியாக இருப்போம் என்பதை என்னுடைய இந்த முதல் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன்.