Sunday 18 May 2014

டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் பெற்ற வெற்றிக்கு சமமானது மோடியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றி

கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  நீண்ட இழுபறிக்குப்பின் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பை கெஜ்ரிவால் ஏற்று டில்லியின் முதல்வரானார்.

எப்படி டெல்லியின் முதல்வருக்கு, டெல்லி காவல்துறையை சேர்ந்த ஒரு ஏட்டை பணி நீக்கவோ, பணியிடை நீக்கவோ அதிகாரமில்லையோ....
லோக்பால் சட்டத்தை இயற்ற முடியவில்லையோ....



இதே நிலைதான் மோடிக்கும் இந்த தேர்தல் வெற்றி கொடுக்கப்போகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து, வெற்றிக்களிப்பில் திளைத்திறுக்கும் பிஜேபியினர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. ஏன் கெஜ்ரிவால் பதவியேற்ற ஐம்பது நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்?

நம் சட்டவிதிகளின் 'விதி' அப்படி.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடையாது.  பிச்சைக்காரன் வாந்தி போல, சேர்ந்தவர் அனைவரும் பதவிக்கு ஆசைப்பட்டனரே தவிர, கொள்கைகளுக்கோ... நாட்டு வளர்ச்சிக்கோ... வறுமை ஒழிப்பிற்கோ கவலைப்படவில்லை.  இந்நிலையில் மோடியின் தலைமையில் பிஜேபி தனிப்பெரும்பான்மையை இந்த தேர்தலில் பெற்றிருக்கிறது.  ஆனால் இதனால் ஏதாவது பிரயோஜனம் மோடிக்கோ, பிஜேபிக்கோ அல்லது நாட்டுக்கோ கிடைக்குமா என்றால், இல்லையென்பதே நிதர்சனம்.

ஏனெனில் நம் அரசியலமைப்பின்படி எந்தவொரு கொள்கை முடிவும் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் பிஜேபி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை கை கொடுக்கும்.  சந்தேகமில்லை.  இதற்குபின் அந்த கொள்கை முடிவு ராஜ்யசபா எனும் மேலவையில் முன்மொழியப்பட்டு அங்கேயும் வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும்.  அதற்கும் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த கொள்கை முடிவு சட்டமாக அறிவிக்கப்படும்.

எனவே பாராளுமன்றத்தில் இருபத்தைந்தாண்டுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை பெற்ற மோடியின் பிஜேபி அரசானது எடுக்கும் எந்தவொரு முடிவும் ராஜ்ய சபாவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு.  கடந்த ஆட்சியில் மொத்தமுள்ள 250 உறுப்பினர்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு 107 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால் ஒவ்வொரு முறையும் வாக்கெடுப்பின்போது எவ்வளவு அமளி ஏற்பட்டது? இப்போது பிஜேபி கூட்டணிக்கு மேலவையில் வெறும் 67 உறுப்பினர்களே இருப்பதால் வாக்கெடுப்பில் வெற்றி என்பது முடியாத ஒன்று.

அதாகப்பட்டது, மோடி என்ன செய்ய முயற்சித்தாலும் கடைசியில் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிகளுக்கும் மிஞ்சப்போவது ஏமாற்றமும் எரிச்சலுமே!  ஆகையால் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலைமையே இவருக்கும்.  கைகள் கட்டப்பட்ட தர்மசங்கடம்.



கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது ஒருபுறமிருக்க,
"கை"க்கு எட்டாததும் வாய்க்கு எட்டாமல் போகும்!!

டிஸ்கி: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி எனக்குள் சில கேள்விகள், பதில்களின்றி...

1) காங்கிரசின் தோல்விக்கு காரணம் தமிழின அழிப்பு எனில், வைகோவின் தோல்விக்கு என்ன காரணம்?

2) திமுகவின் தோல்விக்கு ஊழல், குடும்பம் என்று பல காரணம் கூறினாலும் அதிமுகவின் வெற்றிக்கு ஞாயமான ஒரேயொரு காரணம்?

3) டாக்டர் அன்புமணி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றிக்கு மோடியலை காரணமெனில் பாரிவேந்தரும் AC ஷண்முகமும் டெபாசிட் இழந்ததற்கு யார் காரணம்?

4) இரண்டாயிரம் நாட்களுக்கும் மேலாக உதயகுமார் தலைமையில் பல கிராம மக்கள் ஊண் உறக்கமின்றி போராடும்போதும் ஏன் அவரால் தன் சொந்த தொகுதியில் டெபாஸிட்கூட பெற முடியவில்லை?

1 comment:

  1. ராஜ்ய சபாவில் மாற்றம் வரும்வரை நீங்கள் சொன்னதுதான் நிலமை ! யதார்த்தமான பதிவு.

    உங்களின் கேள்விகளுக்கான பதில்கள்... சத்தியமா தெரியலீங்க ! அரசியல்ல... சாரி, ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜமப்பா !

    நன்றி
    சாமானியன்
    எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr

    ReplyDelete